சென்னை வடபழனி கோவில் அருகே பாதாளச் சாக்கடை ஆறாக ஓடும் நிலையில் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை வடபழநி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. தினசரி உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தற்போது கொரோனா தொற்று ஊரடங்கு அமலில் உள்ளதால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள பக்தர்கள் கோபுர தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன் கோவிலின் மேற்கு கோபுரம் அருகே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் கழிவு நீர் ஆறாக ஓடி வருகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் வாரிய ஊழியர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர்.
பாதாள சாக்கடை எங்கெல்லாம் அடைப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் உடனடியாக சரி செய்து விடுவதாக வாரிய அதிகாரிகள் தெரிவித்து வரும் நிலையில் கோவிலுக்கு அருகே மூன்று நாட்களாக பாதாள சாக்கடை ஆறாக ஓடும் நிலையிலும் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று தெரியாமல் பக்தர்கள் இருந்து வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு
பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : Dinamalar