'இப்பவும் சொல்றேன் மின்தடைக்கு அணில்தான் காரணம்' : சொல்வது செந்தில் பாலாஜி!

Update: 2021-06-28 08:00 GMT

"இப்பவும் சொல்றேன் மின்தடைக்கு அணில்தான் காரணம், இதை நான் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க தயார்" என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ''தமிழகத்தில், ஒன்பது மாதங்களாக, மின் வாரியத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால், மின் மாற்றிகள் உள்ளிட்ட கருவிகளில் பழுது ஏற்பட்டு, மின் தடை ஏற்படுகிறது. இது, தற்காலிகம் தான். இது சரியானதும், தடையில்லா மின்சாரத்தை தி.மு.க அரசு கொடுக்கும். அணில் போன்ற உயிரினங்கள், ஆபத்து அறியாமல் மின் கம்பிகளில் தாவி விளையாடும் போது, 'சார்ட் சர்க்யூட்' ஏற்பட்டு, மின் மாற்றிகள், 'ட்ரிப்' ஆகின்றன. அப்போது, மின் கடத்தல் நிறுத்தப்பட்டு விடும்.

இல்லையெனில், பெரிய ஆபத்து ஏற்படும். எனவே, கம்பிகள் உரசுவது போல, உயிரினங்கள் விளையாடும் போதும், கட்டாயம் மின் தடை ஏற்படும். அமெரிக்காவில் அதிக மின் தடை ஏற்படுகிறது. பெரும்பாலான மின் தடை, அணில்களால் தான் உருவாகிறது. இதை அமெரிக்க பத்திரிகைகளே தெரிவித்துள்ளன.

அ.தி.மு.க., ஆட்சியில், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த சரவணன் என்பவர், மின் விபத்தில் சிக்கி உயிர் இழந்தார். அவரது தந்தை இழப்பீடு கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த போது தான், அணில்களால் மின் மாற்றியில் பழுது ஏற்பட்டு, அதனால் உருவான விபத்தில் சிக்கி, சரவணன் உயிர் இழந்ததாக, தமிழக மின் வாரியம் தரப்பில், நீதிமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், விருத்தாசலம் பாலக்கரை பகுதியில், மின் மாற்றியில் பழுது ஏற்பட்டு, அப்பகுதியில் அரைமணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டிருக்கிறது. அதிகாரிகள் ஆய்வு செய்த போது, மூன்று அணில்கள், அங்கு இறந்து கிடந்தன. நாகப்பட்டினம் மாவட்டம், சாமந்தன்பேட்டையிலும் அணிலால் மின் கம்பிகள் உரசி, மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில், மின் தடை ஏற்பட்டுள்ளது.

அணிலால் மின் தடை ஏற்படும் என்பதை, புள்ளி விபரங்களுடனும், எங்கு வந்து வேண்டுமானாலும் நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன். மின் தடை இல்லா மாநிலமாக, தமிழகம் இருக்க வேண்டும் என்பதில், அமைச்சர் முதல் வாரியத்தின் கடைக்கோடி ஊழியர் வரை, உயிரை கொடுத்து, கொரோனா அச்சத்திலும் பணியாற்றுகிறோம். எங்கள் உழைப்பை கொச்சைப்படுத்த வேண்டாம்'' என அவர் தெரிவித்தார்.

Similar News