தமிழகத்தில் கோவில் சிலைகள் உடைக்கப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் நடந்தேறியுள்ளது. ஏழு அடி உயர அம்மன் சிலையை உடைத்தவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பாக்கம் ஏரியில் ஆலமரத்தின் கீழ் ஏழு அடி உயர அம்மன் சிலை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இந்த சிலையின் வலது, இடது கை மற்றும் கிரீடம் மர்மநபர்களால் உடைக்கப்பட்டிருந்தது. இதேபோல் இன்று அங்குள்ள 3 அடி உயரம் உள்ள அம்மன் சிலையிலும் வலது, இடது கையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஊர் பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார். இது குறித்து பாக்கம் வி.ஏ.ஓ. பாலலட்சுமி கொடுத்த புகாரின்பேரின் அடிப்படையில் கண்டமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிலையை மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சமீபகாலமாக கோவில் சிலைகள் உடைக்கப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை கைது செய்து உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Source : Dinamalar