தஞ்சை மாவட்டம் மானம்பாடி அருகே ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட கோவில் தற்போது பராமரிப்பின்றி அழிந்து வரும் நிலையில் உள்ளதால் அதனை பழமை மாறாமல் புனரமைத்து தருமாறு சிவனடியார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிற்றூர் மானம்பாடி அருகே பதினோராம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில் உள்ள இறைவன் நாகநாதசாமி என அழைக்கப்படுகிறார். கோவிலில் இருக்கும் கல்வெட்டில் இவருடைய பெயர் கைலாசமுடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீர நாராயணபுரம் கல்வெட்டில் இந்த ஊர் நாகன்பாடி என்று உள்ளது. எனவே நாகன்பாடி என்பதே காலப்போக்கில் மானம்பாடி என்று மருவியுள்ளது.
கி.பி. 1012-1044 ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் இந்த கோவிலில் திருப்பணி செய்ததாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவில் தற்போது அழியும் தருவாயில் இருக்கிறது. ஏற்கனவே சாலை விரிவாக்கம் செய்யும் பணியின் போது இந்த கோவில் மதில்சுவர் முற்றிலும் அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் சாலை ஒப்பந்தகாரர் தனது சொந்த செலவில் இந்த கோவில் மதில் சுவரை கட்டினார்.
தற்போது மீண்டும் அந்த பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கி இருப்பதால் கோவில் இடிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சிவன் பக்தர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலின் புனரமைப்பு பணிகளை பழமை மாறாமல் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த பணிகள் அனைத்தும் தொல்பொருள் துறையின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்றும் பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : Malaimalar