கோவில் நிலத்திற்கு இனி பட்டா கிடையாது - முடிவை மாற்றிய அமைச்சர்!

Update: 2021-07-02 01:15 GMT

கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து இருப்பவர்களிடம் வாடகை வசூலிக்கும் போது ஆக்கிரமிப்பாளர்கள் பாதிக்கப்படாமலும் அதேசமயம் கோவிலுக்கு வருவாய் பாதிக்காமல் இருக்கும் வகையில் திருத்தம் செய்யப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழநி அருகே ஆதிமூலப் பெருமாள் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மற்றும் கோவிலில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். 200ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பெருமாள் கோவில் பக்தர்களின் மரண பயம் போக்கி தேக ஆரோக்கியத்தை கொடுக்கும் சிறந்த தளமாகும் என்று தெரிவித்தார். ஆண்டிற்கு 7.5 லட்சம் ரூபாய் உண்டியல் வருமானம் கிடைக்கும் இந்த கோவிலில் 1960ஆம் ஆண்டிற்கு பின்னர் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். பழமையான கோவில்களை சீரமைக்க, முதல் கட்டமாக ஒதுக்கப்பட்ட 100 கோடி ரூபாயில் இந்தக் கோவிலில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த வாரம் சென்னையில் ஒரு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கோவில் நிலங்களில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று பேசி இருந்ததற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறநிலையத்துறை சட்டம் 78இன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலமாக கோவில் நிலத்தில் வீடு கட்டி இருப்பவர்களுக்கு இனி பட்டா வழங்கப்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

கோவில் நிலத்திற்கு பட்டா போட்டு கொடுப்போம் என்று அமைச்சர் பேசியதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தற்போது பட்டா கிடையாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளதால் ஆன்மீக நல விரும்பிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Source :Dinamalar

Similar News