ராம பக்தர்கள் மகிழ்ச்சி : ராமர் கோவில் திறப்பு பற்றிய முக்கிய செய்தி!

Update: 2021-07-17 05:24 GMT

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கட்டுமான பணிகள் 2023 ஆம் ஆண்டிற்குள் முடிவடைந்து பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து விடப்படும் என்று ராமர் கோவிலை கட்டி வரும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற இந்துக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு 2019ஆம் ஆண்டு தீர்வு கிடைத்தது. உச்சநீதிமன்றத்தால் 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கட்டப்பட்டு வரும் இந்த ராமர் கோவிலில் ஒரு பகுதி 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படும் என்றும் 2025ம் ஆண்டிற்குள் 70 ஏக்கர் கோவில் வளாகம் முற்றிலும் கட்டி முடிக்கப்படும் என்று அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறினார்.

15 பேர் கொண்ட ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பொறியாளர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்களுடனான சந்திப்பிற்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளிவந்தது. அயோத்தியில் 2 நாள் பயணம் மேற்கொண்ட அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த ராம ஜென்மபூமி வளாகம் முற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் விதமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது என்றும் கோவில் வளாகத்தில் மழைநீர் சேகரிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கோவில் வளாகத்தில் மரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு பக்தர்களுக்கு இயற்கையான குளிர்ச்சியை அளிக்கும் விதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு ராமர் கோவிலின் ஒரு பகுதியில் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ராம பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Source : Hindustan Times

Similar News