உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்களுடைய நாட்டில் உற்பத்தி செய்த தடுப்பூசிகளை மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்து உற்பத்தியான தடுப்பூசிகளையும் கொள்முதல் செய்து நாட்டு மக்களுக்கு செலுத்தி வருகிறது. இதில் இந்தியாவை எடுத்துக்கொண்டால் இந்தியாவில் ஏற்கனவே உள்ள இரண்டு தடுப்பூசிகள் தவிர ஸ்புட்னிக் V தடுப்பூசியும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யாவில் மட்டும் மற்ற எந்த ஒரு நாட்டின் தடுப்பூசிகளையும் அனுமதி வழங்கவில்லை. எனவே பிற நாட்டின் தடுப்பூசிக்கு அனுமதிப்பது குறித்து தற்போது எங்களிடம் திட்டம் எதுவும் இல்லை என்று ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அரசுத் தரப்பில் கூறுகையில், "வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளை ரஷ்யாவுக்குள் அனுமதிக்கும் திட்டம் தற்போதைக்கு எங்களிடம் இல்லை. எங்களிடம் சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி உள்ளது. ஸ்புட்னிக் V தவிர்த்து உள்நாட்டில் உற்பத்தியாகும் மூன்று கொரோனா தடுப்பூசிகளை நாங்கள் பதிவு செய்து இருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய்த் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளன. ஸ்புட்னிக் கொரோனாவுக்கு எதிராக 91.6% சிறப்பாகச் செயலாற்றக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உள்நாட்டில் உற்பத்தியாகும் தடுப்பூசிகள் இருந்தாலும், ரஷ்யாவில் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யா 6வது இடத்தில் உள்ளது. கொரோனா தடுப்பூசிகளைக் குறைவாகச் செலுத்திவருவதே கொரோனா பரவலுக்குக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் குறிப்பாக 20% மக்களுக்கு மட்டும்தான் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.