ஆடி மாதம் பிறந்ததை தொடர்ந்து சபரிமலைக்கு நாள் ஒன்றுக்கு 10,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மே மாதம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது ஆடி மாதம் என்பதால் சபரிமலையில் இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடை திறக்கப்பட உள்ளது.கொரோனா நோய்தொற்று காரணத்தினால் 5000 பேருக்கு மட்டும் அனுமதி அளித்துவந்த தேவஸ்தானம் தற்போது ஆடிமாதம் என்பதால் கூடுதலாக பத்தாயிரம் பேர் வரை அனுமதிக்க உள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் முடிவு செய்துள்ளது.
ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அப்படி தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கோவிலுக்கு வருவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழுடன் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சபரிமலை இணையதளத்தில் பக்தர்கள் கண்டிப்பாக முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு அங்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.