கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து அறநிலையத் துறையில் இணை ஆணையராக இருந்த அன்புமணி என்பவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதால் அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறையில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இணை ஆணையராக இருந்தவர் அன்புமணி. இவர் பதவியில் இருந்த இரண்டு ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக 41 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அன்புமணி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் பணிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக அன்புமணி சொத்து சேர்த்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் அன்புமணியை கைது செய்து விசாரித்தால் இவருடன் சேர்ந்து ஊழல் செய்த ஊழியர்கள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று தெரிய வருகிறது. மேலும் இவர் இணை ஆணையராக இருந்த காலகட்டத்தில் கோவில்களில் ஏதேனும் சிலைகள் திருடப்பட்டதா என்றும் கோவில்களில் வருமானத்தில் ஏதேனும் கையாடல் செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்து அறநிலையத் துறையில் இணை ஆணையராக இருந்த ஒருவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுதப்பட்டுள்ளதால் அவருடன் இணைந்து ஊழல் செய்த அதிகாரிகள் மற்றும் அரசியல் புள்ளிகள் கலக்கத்தில் இருப்பதாகவும் இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Source: Etvbharat