மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடிகை யாஷகா ஆனந்த் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளாகி அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கு குடி போதை காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரம் அருகே நடந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் அவரது உயிர்த் தோழி வந்தி ரெட்டி பவானி அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்கிறவர். இவரின் சொந்த ஊர் ஹைதராபாத், விபத்தில் இவர் சம்பவ இடத்திலேயே பலியானார். யாஷிகாவுக்கு கால் முறிவும் தலையில் காயமும் ஏற்பட்டுள்ளது. கூடவே வந்த இரு ஆண் நண்பர்களுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு 11.30 மணியளவில் மாமல்லபுரம், சூளேரிக்காடு அருகே கடல்நீரை குடிநீராக்கும் பிளாண்ட் அருகில் வரும்போது யாஷிகாவின் கட்டுப்பாட்டை மீறி கார் சாலை மையத் தடுப்பில் கடுமையாக மோதியுள்ளது. காரை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்துள்ளார். அஜாக்கிரதையாக காரை ஓட்டி வந்ததாக யாஷிகா மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"குடிபோதையில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளனர்" என சூளேரிக்காடு பகுதி மக்கள் கூறினாலும், முதல் தகவல் அறிக்கையில் அதுதொடர்பான விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை.