கொரோனாவால் தவிக்கும் கிராம பூசாரிகளின் கோரிக்கைகள் : செவி சாய்ப்பாரா சிக்ஸர் முதல்வர்?
கிராமத்தில் இருக்கும் கோவில்களில் பணியாற்றிவரும் பூசாரிகளுக்கு மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என்று பூசாரிகள் பேரவை ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய கிராம கோவில் பூசாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சினைகளைப் பற்றி ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்தில் அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் அறங்காவலர் குழு நியமனம் செய்யும் போது அர்ச்சகர், பட்டாச்சாரியார், கிராம கோவில் பூசாரிகளை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
இதேபோல் கொரோனா காலகட்டத்தில் வருமானம் இன்றி தவிக்கும் அனைத்து கிராமப்புற கோவில் பூசாரிக்களுக்கும் கொரோனா நிதி வழங்க வேண்டும். பூசாரிகள் நல வாரியத்தை செம்மைப்படுத்தி உறுப்பினர் அடையாள அட்டை நலவாரிய உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் கிராமப்புற கோயில்களுக்கு கோவிலின் பேரால் பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
கிராம கோவில் பூசாரிகளுக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்றும், பூசாரிகளின் பெண் குழந்தைகளுக்கு திருமண உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், கிராம கோவில் பூசாரிகள் குழந்தைகள் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.