மதம் மாற்ற முயன்றவர்களை கைது செய்யாமல் எதிர்த்தவரை கைது செய்த காவல்துறை - இந்து முன்னணி போராட்டம்!
பள்ளிக் குழந்தைகளை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட கிறிஸ்தவ மிஷனரிகளை விட்டுவிட்டு அவர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தாங்கள் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் மிஷனரிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரத்தில் தனியார் பள்ளி முன்பு கூடிய 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உட்பட 5 கிறிஸ்தவ மிஷனரிகள் பள்ளியின் நுழைவாயில் முன்பு நின்று அங்கு பயிலும் மாணவ மாணவிகளிடம் கேக் மற்றும் புதிய ஏற்பாடு பைபிள் புத்தகத்தை கொடுத்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத், மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவ மிஷினரிகள் வந்த காரை முற்றுகையிட்டனர். உடனே அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மங்களராஜ் என்ற போதகர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த காவல்துறையினர் தற்போது மங்களராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவர் சின்ராசு உள்ளிட்ட, 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் காவல் துறையினர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக கண்டனம் தெரிவித்து இந்து முன்னணியினர் கரூர் சேலம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஏ.டி.எஸ்.பி., கண்ணன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் முறையாக கோரிக்கை மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்த பிறகு இந்து முன்னணியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பள்ளிக் குழந்தைகளிடம் மத புத்தகங்களைக் கொடுத்து மதமாற்றத்தில் ஈடுபட்ட மதபோதகர் கைது செய்யாமல் இந்து முன்னணி நிர்வாகியை கைது செய்து ஒருதலைபட்சமாக நடந்து கொண்ட வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : Dinamalar