குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவு!! மதுரையில் நடந்த சம்பவம்!!
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வேங்கைவயல் என்ற கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று வரையிலும் இந்த செயலை செய்த குற்றவாளியே அரசு கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையில் இதே போன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அமச்சியாபுரம் கிராமத்தில் இருக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தில் அதிகமாக பட்டியலின மக்கள் வசித்து வரும் நிலையில் குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வந்ததை தொடர்ந்து குடிநீர் தொட்டியை பார்த்துள்ளனர். அப்போது குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்கள் ஊராட்சி தலைவரிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததோடு மட்டுமல்லாமல் தொட்டியையும் சுத்தம் செய்யாமல் இருந்துள்ளனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் வாழும் மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து மக்களின் அச்சுறுத்தலுக்கு பின் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தி, குடிநீரின் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளை குறி வைத்து இதுபோன்று செயல்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதை பார்க்க முடிகிறது. வேங்கை வயல் கிராமத்தில் நடந்த பொழுதே குற்றவாளியை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கியிருந்தால் இதுபோன்ற செயல் தற்பொழுது நடந்திருக்காது என்று பல தரப்பில் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வரை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.