கலாச்சாரத்தின் அடையாளம்!! மூன்று இசை மேதைகளின் சிலைகளை திறந்து வைத்த நிர்மலா சீதாராமன்!!
இசை துறையை பொறுத்தவரை தமிழகத்தைச் சேர்ந்த தியாகராஜ சுவாமிகள், அருணாச்சல கவி மற்றும் கர்நாடகாவை சேர்ந்த புரந்தரதாசன் போன்றோரின் பங்கு ஈடு இணையற்றது. இந்நிலையில் இவர்களை பெருமைப்படுத்தும் விதமாக வட மற்றும் தென்னிந்திய கலாச்சார சங்கத்தின் அடையாளமாக அயோத்தியில் இவர்களின் சிலையை நிறுவ உத்திர பிரதேசம் அரசு முடிவெடுத்துள்ளது.
அயோத்தியில் இருக்கும் தேடி பஜாரில் பிரஹஸ்பதி குண்ட் வளாகம் உள்ளது. அப்பகுதியில் மூன்று தென்னிந்திய இசை மேதைகளின் சிலைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கடந்த அக்.8ம் தேதி திறந்து வைத்துள்ளனர்.
திறப்பு விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியபோது, பிரஹஸ்பதி குண்ட் வரலாற்று தளம் மட்டுமல்லாமல், வட மற்றும் தென்னிந்தியாவின் பக்தி சார்ந்த மரபுகளை ஒன்றிணைக்க கூடிய கலாச்சார நல்லிணக்கத்தின் சின்னமாக உள்ளது எனக் கூறினார்.
இதைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பேசிய போது, அயோத்தி என்பது நம்பிக்கையின் மையமாக மட்டுமல்லாமல், இந்திய கலாச்சாரத்தின் சின்னமாக கருதப்படுகிறது. இந்திய பாரம்பரிய இசை மற்றும் பக்தியை உலக அளவில் பரப்பிய பெருமை இந்த மூவருக்கும் சேரும். இவர்களின் கவிதைகள் மற்றும் இசையமைப்புகள் சமூகத்தை பக்தி, அன்பு மற்றும் ஒற்றுமை என்ற வழியில் ஒருமைப்படுத்துகிறது.
அயோத்தி மற்றும் கர்நாடகாவின் கலாச்சார உறவு என்பது பல நூற்றாண்டுகளை தாண்டியது. இந்த நிகழ்வின் மூலம் வட மற்றும் தென்னிந்திய கலாச்சாரம் ஒரே நூலில் இணைக்கப்பட்டு இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.