ஆணவ படுகொலைக்கு அமைக்கப்பட்ட ஆணையம்!! மக்களின் கண் துடைப்பிற்கு மட்டும்தான்!! அண்ணாமலை பதிவு!!
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அமர்வதற்கு முன்பாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆணவப் படுகொலைகளை கண்டித்து அதற்காக தனி சட்டம் ஒன்று கொண்டு வருவோம் என்று உறுதி அளித்த நிலையில் ஆட்சியில் அமர்ந்து இத்தனை ஆண்டுகள் ஆன நிலையிலும் அதற்கான சரியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இப்பொழுது நடைமுறையில் இருக்கும் சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கைகளை எடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தப்படும் என்று ஸ்டாலின் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசியதை தொடர்ந்து எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஆறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் ஆணவப் படுகொலைகளை தடுக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப் போவதாக ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
முற்றிலுமாக இது கண் துடைப்பிற்காக உருவாக்கப்பட்டதாக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நான்கு வருடங்களில் திமுக பல குழுக்களை அமைத்தும் அதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது என்று கேள்வி எழுப்பி அண்ணாமலை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இது போன்ற குற்ற செயல்களை செய்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்காமல் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே அமைக்கப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட குழு கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே கூடியிருப்பதாகவும், முதலமைச்சர் இது குறித்து பேசுவதற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கிறார் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது திமுக அரசு இல்லை என்பதும், பொது மக்களின் கண்துடைப்பிற்காக ஆணையம், குழு என அமைத்து மக்களின் வரிப்பணத்தை முதலமைச்சர் வீணாக்குவதாகவும் இதனால் மக்களுக்கு எந்தவித பயனும் கிடையாது என்று தெரிவித்தார்.