கோவையில் தான் என்னுடைய வாழ்க்கை ஆரம்பித்தது!! சி.பி.ராதா கிருஷ்ணன் உருக்கம்!!

By :  G Pradeep
Update: 2025-10-28 14:53 GMT

சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பின் அரசு முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு செஷல்ஸ் நாட்டிற்கு சென்றார். அங்கு அதிபர் டாக்டர் பாட்ரிக் ஹெர்மினியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு அதன் பிறகு தமிழ்நாட்டிற்கு வந்த துணை குடியரசு தலைவர் கோவையில் கொடிசியா வர்த்தக தொழிற்காட்சி வளாகத்தில் கோயம்புத்தூர் சிட்டிசன்ஸ் போரம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார். 

அப்போது பேசிய துணை குடியரசுத் தலைவர் தனது பொது வாழ்க்கை கோவையில் தான் தொடங்கியதாகவும், அதை இப்போது கூறுவதில் மிகவும் பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார். ஒரு நாடு வளர்ச்சி பெறும் பொழுது தான் அதன் மக்கள் வளர முடியும் என்றும், விவசாயம் மற்றும் தொழிற்சாலை ஆகிய இரண்டுமே நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானதாகும் என்று தெரிவித்தார். 

முதலில் பிரதமர் நரேந்திர மோடி தன்னை நம்பி தென்னை நார் வாரியத்தின் தலைவர் பொறுப்பை ஒப்படைத்தார். அது சிறப்பாக பணியாற்றியதை தொடர்ந்து பதவிக்காலம் நீடித்தது. அதன் பிறகு ஒரே நேரத்தில் மூன்று மாநிலங்களுக்கு ஆளுநராகவும், தொடர்ச்சியாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் ஆளுநராக நியமிக்கப்பட்டதாகவும், தற்பொழுது துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்று இருப்பது தன்னுடைய முயற்சியையும் இறைவனின் முடிவையும் காட்டுகிறது என தெரிவித்தார். 

இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் திருப்பூரில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தி மற்றும் திருப்பூர் குமரன் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு, நாளை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளப் போவதாகவும், அதன் பிறகு அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அந்நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News