தீவிரமாக தொடங்கியுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி! என்னென்ன பண்ணப் போறாங்கன்னு தெரியுமா?
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியில் தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் இருப்பதை உறுதி செய்வது மற்றும் இருப்பிடத்தை விட்டு வெளியேறியவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திருத்த பணியானது வரும் டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண் மற்றும் வாக்காளரின் புகைப்படம் போன்ற விபரங்கள் உள்ளடக்கிய இரு படிவங்களை வழங்கி அந்தப் படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
இதற்காக எந்தவித ஆவணங்களையும் வாக்காளர்கள் அளிக்க தேவை இல்லை என்றும், வேண்டுமானால் தற்பொழுது இருக்கக்கூடிய புதிய புகைப்படத்தை அளித்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. அலுவலர் கொடுத்த படிவத்தை பூர்த்தி செய்த பிறகு வாக்காளர் அலுவலரிடம் படிவத்தை வழங்கி அதற்கான ஒப்புகையை பெற்றுக் கொள்ளலாம்.
வாக்காளர் வேறு தொகுதிக்கு மாறி இருக்கும் பட்சத்தில் அவருடைய பெயர் இந்த பட்டியலில் இடம்பெறாது என்றும், டிசம்பர் 9ம் தேதிக்கு மேல் உரிய ஆவணங்களுடன் மனு அளித்து கொள்ளலாம். மற்றபடி அதே தொகுதியில் இருந்தால் வீட்டிற்கு வரும் அதிகாரியிடம் தெரிவித்தால் மட்டுமே போதுமானது. இந்த அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று முறை வருவார்கள்.
புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள் இதில் சேர்க்க முடியாது. 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர் படிவம் 6 நிரப்பி அளித்தாலும் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் வராது. ஆனால் ஆய்வுக்குப் பிறகு புதிய வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாக வாக்காளர் விபர படிவங்களை நிரப்ப நினைப்பவர்கள் voters.eci.gov.in என்கின்ற இணையதள பக்கத்தில் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.