காஞ்சிபுரம் கோவிலின் தங்கப் பல்லி காணவில்லை!! பக்தரின் புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை!!
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பக்தர்கள் தோஷ நிவர்த்திக்காக தொட்டு வணங்க கூடிய கையில் இருக்கும் தங்கப்பல்லி காணாமல் போய்விட்டதாக கூறி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பக்தர் புகார் அளித்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கோவில் நிர்வாகம், பல்லி இருந்த இடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தற்பொழுது தெற்கு பகுதியில் இடமாற்றம் செய்து வைத்திருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் கோவிலின் முக்கிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் அது உண்மையிலே தங்க பல்லி கிடையாது என்றும், பித்தளைப் பல்லி, வெள்ளிப் பல்லி, சூரியன் மற்றும் சந்திரன் போன்றவற்றால் செய்யப்பட்ட செட் என்று கூறினார்.
மேலும் கோவிலில் மூன்று பல்லி இதுபோன்று வைத்திருப்பதாகவும், இதில் ஒன்று நூற்றாண்டுக்கு மேலும் இருந்து சேதமற்று போனதால் தற்பொழுது பயன்பாட்டில் இல்லை என்று தெரிவித்தார். மற்ற இரண்டு 1970 ஆம் ஆண்டிலும், 2012 ஆம் ஆண்டிலும் நன்கொடையாக அளிக்கப்பட்டதாகும். பழைய செட்டை எடுத்துவிட்டு புதிய செட் வைப்பதா என்பது குறித்து கோவில் நிர்வாகம் ஆலோசனை நடத்திய நிலையில் இன்னும் எந்த மாற்றமும் செய்யவில்லை.
கோவிலின் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த உடன் மீண்டும் பல்லி சிற்பங்கள் இருந்த இடத்திலேயே வைக்கப்படும் என்று அவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் கட்டி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்ததாக தெரிவித்தார். இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவிலின் தங்கப்பல்லி காணாமல் போனதாக அழிக்கப்பட்ட புகாரில் ஏதேனும் உண்மை இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.