மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய சென்னை!! மழைக்கு தயாராக இருப்பதாக திமுக கூறியது பொய்யா??
தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் குடியிருப்பு பகுதிகள் பாதிப்படைந்துள்ளது. என்னதான் தமிழக அரசு பலமுறை மழைக்கு தயாராக இருப்பதாக உறுதியளித்தாலும் கூட பல பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையிலும் சாலைகள் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடிய வகையிலும் தான் இருக்கிறது.
4000 கோடி ரூபாய் மழை நீர் வடிகால் பணிக்காக செலவிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் எப்படி இந்த அளவு மோசமான நிலை ஏற்படுகிறது என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையின் வடிகால் பணிகள் 97 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், மலையை எதிர்கொள்வதற்கு தயாரான நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
அப்படி இருக்கையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அண்ணா சாலை, சர்தார் பட்டேல் சாலை பழைய மகாபலிபுரம் சாலை என பல பகுதிகளில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து பல நிபுணர்கள் இது ஒரு நிர்வாகத்தின் தோல்வி என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வெள்ளப் பெருக்கத்திற்கு காலக்கெடுவை நீடித்து சரியாக திட்டமிடாமல் சாலையை தோண்டுவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதித்தது தான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. சிங்காரச் சென்னை என்பது வெள்ளத்தில் மூழ்கிய தெருக்கலாலும், உடைந்த சாலைகளாலும் காட்சியளித்து வருகிறது. இதனால் சென்னையில் வாழும் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.