ஆர்எஸ்எஸ் அமைப்பானது இந்துக்களை தவிர்த்து மற்ற பிரிவினருக்கு எதிரானது இல்லை என்று மோகன் பகவத் விளக்கம்!!
திருச்சி சமயபுரத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை தொடர்ந்து அதில் கல்வியாளர்கள் மற்றும் பிரபலங்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசியத் தலைவர் மோகன் பகவத், இந்த அமைப்பானது தொடங்கி 100 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் தான் உலக அளவில் பெயர் பெற்று உள்ளது எனக் கூறியுள்ளார். இந்த சங்கம் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வமான தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும், உலக அளவில் இதுபோன்று வேறு எந்த சங்கமும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளாக இது போன்று ஒரு சங்கமே கிடையாது என்றும் சங்கத்தை பற்றி புரிந்து கொள்ள வெளியில் இருந்து பார்த்தாலோ, விஹெச்பி வழியாகவோ, பாஜக வழியாகவோ பார்த்தால் புரிந்து கொள்ள முடியாது என்றும், சங்கத்தின் உள்ளே வந்து சகா கூட்டங்கள், சுவயம் சேவகர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தை நேரில் சென்று சந்தித்தால் தான் புரியும் என்று கூறியுள்ளார்.
இந்த சங்கமானது ஒட்டுமொத்த சமூகத்திற்காக செயல்பட்டு வருவதாகவும், அதனுடைய முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்காக இந்தியாவில் இருக்கும் சில முக்கியமான நபர்கள் சங்கம் குறித்த தகவலை பல இடங்களில் எடுத்துரைக்க வேண்டும். கடந்த சில காலமாக சங்கத்திற்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்து வரும் நிலையில் சங்கம் குறித்து சரியான புரிதல் இல்லாமல் சில தவறான கருத்துக்களும் பரப்பப்பட்டு வருகிறது.
இச்சங்கமானது முஸ்லிம், கிறிஸ்தவர்கள், பிரிட்டிஷார் என யாருக்கும் எதிரானதாக உருவாக்கப்படவில்லை என்றும், இந்துக்களின் பாதுகாப்பிற்கும், முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்டதாகும் என்று கூறியுள்ளார். ஆனால் இந்துக்களின் சமயம் என்று கூறுவது வழிபாடு அல்ல என்றும், வாழ்வியல் முறை என்றும் தெரிவித்துள்ளார். எனவே பரவி வரும் தவறான தகவல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அனைவருக்கும் சங்கத்தின் முக்கியத்துவத்தையும், சரியான தகவலையும் பரப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.