மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை பாரதிய மொழிகளின் தினமாக கொண்டாடி வரும் மத்திய அரசு!!
“பாரதிய மொழிகள் தினம்: மொழிகள் பலவாயினும் சிந்தனை ஒன்றே”
தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினத்தை மாண்புமிகு பாரத பிரதமர் தலைமயிலான மத்திய அரசு பாரதிய மொழிகள் தினமாக அறிவித்து அரசாணை இயற்றியது. அதன் படி மத்திய கல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கை மூலமாக டிசம்பர் 11 ஆம் தேதியை , 2023 -ஆம் ஆண்டு தேசிய மொழிகள் தினமாக அறிவித்தது. இந்த நாள் வெறும் கொண்டாட்டமல்ல; இது இந்தியாவின் ஆத்மாவான மொழி ஒருமைப்பாட்டைப் போற்றுவதற்கும், மகாகவி பாரதியாருக்கு நாம் செலுத்தும் உயரிய மரியாதைக்கும் ஒரு சான்றாகும். அன்றைய கடினமான கால கட்டத்தில் மக்களிடம் சுதந்திர தாகத்தை தனது உணர்ச்சி மிக்க தேச பக்தி பாடல்கள் மூலம் உண்டாக்கியதோடு மட்டுமல்ல, தேசிய மொழிகளின் மத்தியில் உள்ள ஒத்த சிந்தனையை பரப்பிய தூதுவராக விளங்கினார்.
பாரதியார், ஒரு கவிஞர் மட்டுமல்ல, அவர் ஒரு தீர்க்கதரிசி, சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் மொழியியல் நல்லிணக்கத்தின் தீவிர ஆதரவாளர். அவரது பிறந்தநாள், பாரதிய மொழிகள் தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பல முக்கிய காரணங்கள் உள்ளன. பாரதியார் ஒரு பன்மொழிப் புலவர். அவர் தமிழைத் தன் உயிராக நேசித்தாலும், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் ஆழ்ந்த அறிவு கொண்டிருந்தார். மொழிகள் மக்களைப் பிரிப்பதற்குப் பதிலாக, இணைக்க வேண்டும் என்று அவர் உறுதியாக நம்பினார்.
"செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்" என்று பாடியதன் மூலம், இந்தியத் தாயின் பல்வேறு மொழிகளைக் கடந்து, அதன் ஆழமான சிந்தனை ஒருமையைக் கோடிட்டுக் காட்டினார். இந்த வரிகள், இந்தியா ஒரு தேசம், பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், அடிப்படை ஒற்றுமை கொண்டது என்பதை உணர்த்தின. பாரத்தின் ஆன்மிகம் ஒன்றுதான்! ஆத்மா ஒன்று தான். சிந்தனை ஒன்று தான். மொழி என்பது தொடர்பு கொள்ளாத தேவையான சாதனம் மட்டுமல்ல, ஒரு பண்பாட்டுப் பொக்கிஷத்தை தலைமுறை தலைமுறைகளுக்கு கடத்தும் ஒரு அற்புதமான கருவி என்று நாமும் உணர வேண்டும்.