வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு இழப்பீடு நடவடிக்கை எடுக்க இந்திய தூதரகதிற்கு நீதிமன்றம் உத்தரவு!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மலர்விழி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தன் கணவர் மாரிமுத்து மத்திய ஆப்பிரிக்காவுக்கு 2021-ம் ஆண்டு தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். அங்கு எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாக கூறியிருந்தார்.
கேமரூன் நாட்டுத் தொழிற்சாலை இந்திய மதிப்பில் 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தது. இந்த இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடித்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொள்கை சார்ந்த சட்ட திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும், இழப்பீடு வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய தூதரகம் எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.