ஓசூர் சர்வதேச விமான நிலையம் குறித்து விவசாயிகள் எதிர்ப்பை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் போட்டி!!
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிக்கோ) 2,980 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்துள்ளது.
20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விவசாயிகள் எதிர்ப்பைத் தேர்தலில் தங்களுக்கு சாதகமாக்க அதிமுக மற்றும் பாஜக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி மக்கள் பிரதிநிதிகள் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வந்தனர். விவசாயிகளின் எதிர்ப்பு தங்களுக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஓசூர் அருகே முத்தாலி கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டு, விவசாயிகளை பாதிக்காத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதி அளித்தனர். எம்பி கோபிநாத், "விமான நிலைய திட்டத்துக்கு அரசு நிலங்களை பயன்படுத்திக் கொள்ள பரிந்துரை செய்வோம்" என்றார்.