மதுரை சித்திரைத் திருவிழாவிற்குத் தடை- கொந்தளிக்கும் இந்துக்கள்!

Update: 2021-04-13 06:18 GMT

கோவில் நகரமான மதுரையின் சிறப்புகளுள் ஒன்றான சித்திரைத் திருவிழாவிற்கு இந்த ஆண்டும் அரசு தடை விதித்திருப்பது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலைக் காரணம் காட்டியும் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருந்ததாலும் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் வைரஸ் பரவலைக் காரணமாக திருவிழாவுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கூறியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது‌.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதல் அலை குறைந்து சகஜ நிலை திரும்பத் தொடங்கி சில மாதங்களே ஆகும் நிலையில், தற்போது இரண்டாவது அலை பரவுவதால் அதிகம் பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாவதாகக் கூறப்படுகிறது. இதனால் திருவிழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது‌. கிறிஸ்தவ, இஸ்லாமிய மத விழாக்கள் முடிந்து தேர்தல் பரபரப்பும் ஓய்ந்து விட்ட நிலையில் இந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் அரசு தடை விதிப்பதாக இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக மதுரையின் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவில் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு எதிர் சேவை சாதித்து வைகையாற்றில் இறங்கும் நிகழ்வுக்கும் மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டத்தை உள்ளடக்கிய சித்திரை திருவிழாவிற்கும் மதுரை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

'தேர்தல் கூட்டம் போடும்போதும் பிற மத விழாக்கள் நடக்கும் போதும் வைரஸ் பரவுவது தெரியவில்லையா' என்றும் கோவில்களை நம்பியிருக்கும் எக்கச்சக்கமான குடும்பங்களை கோவில்களை மூடி வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்க விடுவது முறையா என்றும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அழகரை வெளியில் விட வேண்டுமென்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கோடி மதுரை மக்கள் போராடி வருகின்றனர்.

அதேபோல் இந்து முன்னணி அமைப்பின் சார்பிலும் எத்தனை தடை போட்டாலும் இந்த ஆண்டு இந்துக்களின் பாரம்பரிய திருவிழாவான மதுரை சித்திரை திருவிழா நடந்தே தீரும் என்று நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து விட்டு, தேர்தலின் போது காசு கொடுத்து கூட்டம் கூட்டியவர்களுக்கு தற்போது தான் கொரோனா கண்ணுக்கு தெரிகிறதோ என்றும் அனைத்து அரசியல் கட்சிகளையும் மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

Tags:    

Similar News