விக்ரம் 1 ராக்கெட்டை அறிமுகம் செய்த பிரதமர்!! 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது என்று பெருமிதம்!
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனமானது இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகள் மற்றும் ஐஐடி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட தனியார் விண்வெளி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் விக்ரம் எஸ் என்கின்ற சிறிய ராக்கெட் ஆனது கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில் தற்பொழுது புவியின் சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தக்கூடிய வகையில் ராக்கெட்களை வர்த்தக ரீதியாக அனுப்ப ஹைதராபாத்தில் இரண்டு லட்சம் சதுர அடியில் மிகப்பெரிய வளாகத்தை அமைத்துள்ளது.
இன்ஃபினிட்டி என்று அழைக்கப்படும் இந்த நிறுவனத்தை காணொளி மூலமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்த விக்ரம் 1 என்கின்ற ராக்கெட்டையும் பிரதமர் அறிமுகம் செய்து வைத்தார். இது மாதத்திற்கு ஒரு ராக்கெட்டை உருவாக்கும் அளவிற்கு திறன் படைத்தது என்று இந்த நிறுவனத்தின் நிறுவனர் பவன் சந்தனா தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விண்வெளியில் செயற்கைக்கோள் ஏவுவதில் இந்தியா முன்னிலை பெற்றிருப்பதாகவும், அந்த வகையில் இந்த நிறுவனம் சாதனை படைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
விண்வெளியின் நம்பகத் தன்மையை இந்தியா பெற்றிருப்பதாகவும், இந்த நிறுவனத்தால் பல இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த நிறுவனமானது தனியார் நிறுவனங்களை வளர்ப்பதில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது. 300க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விண்வெளி துறையில் நிறுவப்பட்டு இருப்பதாகவும், அதன் மூலம் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அணுசக்தி துறையை தனியார் நிறுவனங்களுக்கு கொண்டுவரும் திட்டங்களும் மத்திய அரசிடம் இருப்பதாகவும், ஐந்து பெரிய நிறுவனங்கள் விண்வெளி துறையில் உருவாக இருப்பதாகவும், 21 ஆம் நூற்றாண்டை இந்தியாவில் நூற்றாண்டாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.