ஏழை மாணவியின் படிப்பிற்காக சுமார் ₹1.2 லட்சத்திற்கு மாம்பழங்களை வாங்கிய தொழிலதிபர்!

Update: 2021-06-28 12:37 GMT

தற்பொழுது உள்ள கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல்வேறு பள்ளிகளில் வகுப்புகள் அனைத்தும் இணையம் மூலமாக நடைபெறுகின்றன. மேலும் இதில் ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்கள் குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் இல்லாத வீடுகளில் உள்ள மாணவர்கள் தங்களுடைய கல்வி நிலை குறித்து ஒரு கேள்விக்குறியாக தற்போது வரை இருந்து வருகிறது. ஜார்க்கண்டில் உள்ள ஜம்ஷெட்பூரை சேர்ந்தவர் துள்சி குமாரி. இந்த மாணவி ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை ஸ்ரீமல் குமார், சாலையோரத்தில் பழங்களை விற்று வருகிறார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


ஆனால் துளசி குமாரியிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால் அவரால் ஆன்லைனில் படிக்க முடியவில்லை. பெண்ணுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்க குமாரிடம் வசதியில்லை. இது பற்றி தகவல் அறிந்த மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அமியா ஹீட்டே ஜம்ஷெட்பூருக்கு வந்து துளசியை தேடி கண்டுபிடித்தார். துளசியிடம் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு 12 மாம்பழங்களை வாங்கினார்.


மேலும் அவர் துளசியின் தந்தையின் வங்கி கணக்குக்கு 1.2 லட்ச ரூபாயை உடனடியாக ஆன்லைன் வழியாக செலுத்தினார். இந்த பணத்தை வைத்து ஸ்மார்ட் போன் வாங்கி ஆன்லைனில் தொடர்ந்து படிக்க வேண்டும் என துளசியிடம் ஹீட்டே கேட்டுக் கொண்டார். மேலும், ஒரு ஆண்டுக்கான இன்டர்நெட் இணைப்பு கட்டணத்தையும் துள்சிக்கு ஹீட்டே வழங்கினார். எனவே படிக்க ஆர்வம் இருந்தும் தங்களுடைய ஏழ்மை நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமல் தவிர்க்கும் குழந்தைகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் என்ற கருத்தை அவர் சமுதாயத்திற்கு விட்டுச் சென்றுள்ளார். 

Similar News