தாது மணல் முறைகேடு வழக்கு: தமிழ்நாட்டில் 12 இடங்களில் சி.பி.ஐ சோதனை!

Update: 2025-04-07 17:51 GMT
தாது மணல் முறைகேடு வழக்கு: தமிழ்நாட்டில் 12 இடங்களில் சி.பி.ஐ சோதனை!

2000-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கடற்கரையோர தாது மணல் கனிமங்களை சட்டவிரோதமாக எடுத்தல், ஏற்றுமதி செய்தல் ஆகியவை தொடர்பாக 6 நிறுவனங்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 21 நபர்கள் மீது மத்திய புலனாய்வுத் அமைப்பான சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக 17.02.2025 அன்று பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


குற்றம் சாட்டப்பட்ட சுரங்க நிறுவனங்களும் இயக்குநர்களும், கனிமங்கள், தாதுப் பொருட்கள் சட்டம் -1957, அணுசக்தி சட்டம் - 1962 ஆகியவற்றின் விதிகளை மீறியதாகவும், சில அரசு ஊழியர்கள் தங்கள் பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுரங்க நிறுவனங்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கியதாகவும் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த சுரங்க நிறுவனங்களால் கனிம இழப்பு, உரிமைத் தொகை இழப்பு ஆகியவற்றால் அரசுக்கு ₹ 5832.29 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தாது மணல் எடுத்தல், ஏற்றுமதி ஆகியவற்றில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை ஆகிய நகரங்களில் 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News