கோவிஷீல்டு தடூப்பூசி செலுத்தப்பட்டவர்கள் 12-16 வாரங்கள் கழித்தே இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் - அரசு அறிவுறுத்தல்!
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை முதல் டோஸ் எடுத்துக்கொண்ட பிறகு இரண்டாவது டோஸ் எடுத்துக் கொள்வதற்கான கால அளவு 6 முதல் 8 வாரங்களாக இருந்ததை தற்போது 12 முதல் 16 வரை நீட்டித்து மருத்துவர்.எம்.கே அரோரா தலைமையிலான கொரோனா செயற்குழு பரிந்துரை செய்துள்ளது.
தடுப்பூசி ஆராய்ச்சியின் அடிப்படையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவேளையை நீட்டிக்க இந்த செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் போடப்பட்டு வரும் மற்றொரு தடுப்பூசியான கோவேக்சின் தடுப்பூசிக்கான கால இடைவெளியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த செயற்குழுவில் இன்க்ளென் அறக்கட்டளை இயக்குநர் மருத்துவர் என் கே அரோரா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் மற்றும் தலைவர் மருத்துவர் ராக்கேஷ் அகர்வால், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ககன்தீப் கங், மற்றும் முன்னணி மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மருத்துவர்கள் தடுப்பூசி குறித்த ஆய்வுகளை மேற்பாய்வையிட்டு வருகின்றனர்.
இந்த கொரோனா செயற்குழுவின் பரிந்துரையை மே 12ஆம் தேதி அன்று நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் தலைமையிலான கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு ஏற்றுக்கொண்டது. இந்தப் பரிந்துரையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
எனவே தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசுக்காக காத்திருப்பவர்களுக்கு 12 முதல் 16 வார கால இடைவேளைக்குப் பிறகு அடுத்த டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் இன்னும் சில காலம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அதிக அளவில் தடூப்பூசி செலுத்தும் வாய்ப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.
Source: PIB