தமிழகத்தில் ரூ.19,850 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டங்கள்.. நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார் பிரதமர் மோடி..
தமிழ்நாட்டில் இன்று ரூ. 19,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தமிழ்நாட்டில் ரயில், சாலை, கப்பல், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள் தொடர்பான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டடத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவர்களுக்குப் பிரதமர் விருதுகள் வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார். திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார். ரூ. 1100 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு நிலை புதிய சர்வதேச முனையக் கட்டடம் ஆண்டுதோறும் 44 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில் சுமார் 3500 பயணிகளைக் கையாளும் திறனை இது கொண்டுள்ளது. புதிய முனையத்தில் பயணிகள் வசதிக்காக அதிநவீன வசதிகள் மற்றும் அம்சங்கள் உள்ளன.
இந்த நிகழ்ச்சியின்போது பல ரயில்வே திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சேலம் - மேக்னசைட் சந்திப்பு - ஓமலூர் - மேட்டூர் அணைப் பிரிவில், 41.4 கிலோ மீட்டரை இரட்டை ரயில்பாதைத் திட்டம். மதுரை - தூத்துக்குடி இடையே 160 கிலோ மீட்டர் துாரத்திற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம், திருச்சிராப்பள்ளி - மானாமதுரை - விருதுநகர் ரயில் பாதை மின்மயமாக்கல், விருதுநகர் - தென்காசி சந்திப்பு மின்மயமாக்கல், செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்பாதை மின்மயமாக்கல் ஆகிய மூன்று திட்டங்களும் இதில் அடங்கும். சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துத் திறனை மேம்படுத்தவும், தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த ரயில் திட்டங்கள் உதவும்.
இந்த நிகழ்ச்சியின்போது ஐந்து சாலைத் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மக்களின் பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்திற்கும், திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, உத்திரகோசமங்கை, தேவிப்பட்டினம், ஏர்வாடி, மதுரை போன்ற தொழில் மற்றும் வணிக மையங்களின் இணைப்பை மேம்படுத்துவதற்கும் இந்த சாலைத் திட்டங்கள் உதவும்..
Input & Image courtesy: News