ஆரவாரத்துடன் புறப்பட்ட தமிழக மக்கள்.. காசி தமிழ் சங்கத்தின் 2ம் கட்ட பயணம்..
காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டம், 2023 டிசம்பர் 17 முதல் 30 வரை புனித நகரமான காசியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க புனித நதியான கங்கையின் பெயரில் அமைந்த முதல் குழுவில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் அடங்கிய 216 கொண்ட குழுவினர் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல் குழுவினரைக் கொடியசைத்து அனுப்பி வைத்தார். ஆற்காடு நவாப், ராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்த துறவிகள் மற்றும் பிற பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்கும் குழுவினர் 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் குழுவுக்கு கங்கை எனவும், ஆசிரியர்கள் குழுவுக்கு யமுனை எனவும், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் குழுவுக்கு கோதாவரி எனவும், ஆன்மீக குழுவுக்கு சரஸ்வதி எனவும், விவசாயிகள் மற்றும் கைவினை கலைஞர்கள் குழுவுக்கு நர்மதா எனவும், எழுத்தாளர்கள் குழுவுக்கு சிந்து எனவும், வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் குழுவுக்கு காவேரி எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 1400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
2023 டிசம்பர் 8 ஆம் தேதி வரை இதில் கலந்து கொள்ள விரும்பும் பிரதிநிதிகளிடமிருந்து 42,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 1400 பேர் தேர்வு செய்யப்பட்டு 7 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிலும் 200 பேர் வீதம் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கலாச்சாரம், ரயில்வே, சுற்றுலா, ஜவுளி, உணவு பதப்படுத்துதல், குறு சிறு நடுத்தர நிறுவனங்கள், தகவல் ஒலிபரப்பு, திறன் மேம்பாடு ஆகிய அமைச்சகங்களுடன் இணைந்து இந்தக் காசி தமிழ் சங்கமத்தை கல்வி அமைச்சகம் ஒருங்கிணைத்து நடத்துகிறது. மத்திய கலாசார அமைச்சகம், உத்தரப்பிரதேச அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் குறிப்பிட்ட துறைகள் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் கட்ட காசி தமிழ் சங்கமத்தின்போது கிடைத்த நற்பெயரைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டும் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) தமிழ்நாட்டில் இதனை ஏற்பாடு செய்யும் நிறுவனமாக செயல்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இதனை நடத்தும் நிறுவனமாக செயல்படுகிறது.
Input & Image courtesy: News