ஜனவரி 2 இல் திருச்சி விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையம் திறப்பு! பிரதமர் பங்கேற்பு!

Update: 2023-12-24 01:56 GMT

ரூபாய் 951 கோடியில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் பிரம்மாண்ட புதிய முனைய திறப்பு விழா வரும் ஜனவரி இரண்டாம் தேதி நடைபெற உள்ளதாகவும் அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி திருச்சி விமான நிலையத்தின் பிரம்மாண்ட புதிய முனையம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதற்குப் பிறகு கொரோனா பெருந்துயர் காலம் ஏற்பட்டதால் 2021 முடிக்க வேண்டிய இந்த முனையத்தின் பணிகள் அனைத்தும் தாமதமானது. அதற்குப் பிறகு கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இரவு பகலாக முனையத்தின் கட்டுமான பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டுள்ளது. 

ரூபாய் 951 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய முனையம் 60, 723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிட்டதட்ட 4000 சர்வதேச பயணிகளும் 1500 உள்நாட்டு பயணிகளையும் ஒரே நேரத்தில் கையாளும் திறனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை ஜனவரி 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் தமிழக கலாச்சார பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாகக் கொண்ட ஓவியங்களும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரமும் இம்முனையத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிரிஹா 4 என்கிற சுற்றுச்சூழலுக்கு உகந்த தரநிலை கொண்டதாகவும் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Source : The Hindu Tamilthisai 

Similar News