இறந்தவர்களின் ஆதார் எண்ணை செயலிழப்பதற்கான நடவடிக்கை! 2 கோடிக்கும் மேல் நீக்கப்பட்ட இறந்தவர்களின் ஆதார் எண்!
ஆதார் ஆணையம் ஆனது இரண்டு கோடிக்கும் மேல் நாட்டில் இறந்தவர்களின் ஆதார் எண்களை நீக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் ஆதார் அட்டைகளை வைத்து மோசடிகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காகவும், அவர்களுக்கு கிடைக்கும் நலத்திட்ட முயற்சிகளில் மோசடிகள் செய்வதை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறியுள்ளது. மேலும் இந்திய தலைமை பதிவாளர், பொது வினியோக திட்டம் போன்ற பலவற்றின் வாயிலாக தரவுகளை பெற்று இறந்தவர்களின் ஆதார் அட்டைகளை செயல் இழப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் பிற நிதி நிறுவனங்கள் மற்றும் சில அமைப்புகளுடன் இணைந்து இறந்தவர்களின் தரவுகளை பெறுவதற்கு ஆதார் ஆணையம் செயல்பட்டு வருகிறது. பொதுவாக ஒருவருக்கு அளிக்கப்பட்ட ஆதார் எண் மீண்டும் மற்றொருவருக்கு அளிக்கப்பட மாட்டாது என்றாலும் கூட ஒருவர் இறந்த பிறகு அவருடைய ஆதார் எண்ணை செயலிழக்க செய்தால் மோசடிகளை தடுக்க முடியும் என்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒருவரின் இறப்பு சான்றிதழை பெற்ற பிறகு அவரின் குடும்பத்தினர் myAadhaar portal சென்று இறந்தவர்களின் ஆதார் எண் மற்றும் இறப்பு பதிவு எண் போன்ற தகவலை பதிவு செய்த பிறகு இறந்தவர்களின் ஆதார் அட்டை செயலிழக்க செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக குடும்ப உறுப்பினரின் இறப்பைத் தெரிவித்தல் என்ற வசதியும் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிவில் பதிவு முறையானது பின்பற்றப்பட்டு வருவதாகவும் மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆதார் போர்டலுடன் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.