வேகமெடுக்க போகும் சென்னை மெட்ரோ 2 ஆம் கட்ட திட்ட பணிகள்: 65% செலவை ஏற்ற மத்திய அரசு!
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்ததை அடுத்து, அவற்றிற்கான 65 சதவிகித நிதியை மத்திய அரசு வழங்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி திட்டம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூபாய் 63,246 கோடி. இந்தத் திட்டத்தின் ஆரம்ப காலத்தில் முழுக்க முழுக்க இது மாநில அரசின் திட்டமாக இருந்ததால் அதற்கு மத்திய அரசு 10% நிதியை மட்டுமே செலவிட்டு வந்தது. அதாவது ஏதேனும் ஒரு திட்டம் மாநில அரசின் திட்டமாக இருந்தால் அதற்கு 10 சதவிகித நிதியை மட்டுமே மத்திய அரசு வழங்கும். மற்ற முழு செலவையும் மாநில அரசு தான் ஏற்க வேண்டும். ஆனால் மாநில அரசு போதுமான நிதி இல்லாமல் இந்த திட்டத்தை மெதுவாகவே செயல்படுத்தி வந்தது.
இதனால் இந்த திட்டத்தில் மத்திய அரசின் உதவி வேண்டுமென்ற கோரிக்கை எழுந்து வர தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் பிரதமர் மோடியை சந்தித்த பொழுது இந்த கோரிக்கையையும் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்ட பணிக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த திட்டத்தில் மத்திய அரசு வழங்க உள்ள நிதி குறித்த தகவல்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அதில், மொத்தம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டுச் செலவில் 'மத்திய துறை' திட்டமாக, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதுவரை இந்தத் திட்டம், மதிப்பிடப்பட்ட திட்டச் செலவில் சுமார் 90 சதவீதம் அளவிற்கு திட்ட நிதியுதவி முதன்மையாகத் தமிழ்நாடு அரசின் பொறுப்பு என்ற நிலையில் மாநிலத் துறை திட்டமாக செயல்படுத்தப்பட்டு வந்தது. மெட்ரோ ரயில் கொள்கை 2017-ன் படி, நிலத்தின் விலை மற்றும் சில பொருட்களைத் தவிர்த்து, திட்டச் செலவில் 10 சதவீதம் நிதியளிப்பதே மத்திய அரசின் பங்காக இருந்தது. இருப்பினும், இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து மாநில அரசு ரூ.32,548 கோடி கடனாக நிதி திரட்டுவதில் மத்திய அரசு அதற்கு நேரடியாக உதவி செய்துள்ளது. இதில் இதுவரை சுமார் ரூ.6,100 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.