டெலி-லா 2.0 அறிமுகம்.. டிஜிட்டல் முறையில் சட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு..
சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழ் நீதித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் தொலை சட்ட சேவைத் திட்டமான டெலி-லா திட்டத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் அதன் இரண்டாவது கட்டமான டெலி-லா 2.0 முன்முயற்சி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. நீதி நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பை இது வலுப்படுத்துகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சட்டம் மற்றும் நீதித் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கலந்து கொண்டு டெலி-லா 2.0-ஐ தொடங்கி வைத்து உரையாற்றினார்.
சட்ட உதவி தேவை எனில் அதற்காக மக்கள் அணுகுவதை மேலும் மேம்படுத்துவதற்கான இணைப்பு இது என அவர் கூறினார். இந்தியா முழுவதும் சட்ட சேவைகள் கிடைப்பதை ஜனநாயகப் படுத்துவதில் இந்த தொலை சட்ட சேவையின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். இது டிஜிட்டல் முறையில் வழங்கப்படும், மக்களை மையமாகக் கொண்ட சட்ட சேவைகளில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்று அவர் கூறினார். மக்களின் வாழ்க்கையில் தொழில்நுட்பம் வகிக்கும் பங்கை அவர் கூறியதோடு, நீதி வழங்கலை தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தொலை சட்ட சேவைகளின் பயனாளிகளின் எண்ணிக்கை 50 லட்சம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அனைவருக்கும் அத்தியாவசிய சட்ட உதவி தேவை எனவும் அதை உறுதி செய்யும் வகையில், சேவைகளை வழங்குமாறும் சட்ட வல்லுநர்களுக்கு இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிவுறுத்தினார்.
Input & Image courtesy: News