மத்திய பட்ஜெட் 2024- சிறப்பு அறிவிப்புகளும் அம்சங்களும்!
நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய பட்ஜெட்டின் சில சிறப்புகள் பற்றி காண்போம்.
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள்:
முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.நாடு முழுவதும் 12 தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும் . பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் வாராந்திர உணவுச் சந்தைகள் மேம்படுத்தப்படும். நகர்ப்புற ஏழைகள் மேம்பாட்டுக்கு ரூபாய் 10 லட்சம் கோடியில் திட்டம். தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயங்கள் கூடுதலாக உருவாக்கப்படும்.
ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சார வசதி அளிக்கப்படும். கடலுக்குள் கனிம அகழாய்வுக்கான ஏலம் விரைவில் விடப்படும்.5 ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும். தொழில் பழகுநருக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். தொழிற்சாலை பணியாளர்களுக்காக குறைந்த வாடகையில் தங்குமிடங்கள் அமைக்கப்படும். உற்பத்தித் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும். வருமான வரி சட்டம் 1961 ஆறு மாதங்களில் மறுசீரமைக்கப்படும். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நெருக்கடியான சமயங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி தொடர்ந்து கிடைக்க ஆவண செய்யப்படும். வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்கும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவ அதிக கவனம் செலுத்தப்படும். ஊரக மேம்பாடு மற்றும் கட்டமைப்புக்கு ரூபாய் 2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் மேம்பாட்டிற்கு 3 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்.