தலித்துக்களுக்கான பிரச்சனைகளை ஒதுக்கி தள்ளும் திமுக : 2026 ல் தேர்தலில் தலித்துகள் திமுகவிற்கு ஆதரவளிக்க மாட்டோம் : இயக்குநர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு

Update: 2024-07-20 04:53 GMT

கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பொன்னை பாலு, திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் இந்த அதிரடி கைது நடவடிக்கையின் மீது சந்தேகம் இருப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாடியது மட்டுமின்றி, திமுகவின் கூட்டணி கட்சியாக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளிகள் உண்மை குற்றவாளிகள் கிடையாது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். ஆனால் பூந்தமல்லி சிறையில் அடைத்த 11 குற்றவாளிகளை ஐந்து நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது திருவேங்கடம் தப்ப முயன்றதாக குற்றச்சாட்டப்பட்டு என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வர கிட்டத்தட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு கோடி ரூபாய் கைமாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் இதில் சம்பந்தப்பட்ட இருப்பதாக செய்திகள் வெளியானது. 

முன்னதாக திராவிடம் மற்றும் பெரியார் சிந்தனைகள் என்ற கருத்தை வைத்து திமுகவுடனான ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வந்தவர் தமிழ் சினிமாவின் இயக்குனரான பா.ரஞ்சித். இவர் இயக்கும் திரைப்படங்கள் மூலமும் இவற்றை ஆங்காங்கே வெளிக்காட்டி இருப்பார். ஆனால் தலித் மக்களின் குரலாக ஒழித்து வந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொந்தளித்த பா.ரஞ்சித் திமுக அரசை நோக்கியும் கேள்விகளை தொடுத்தார். "சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?" என்று தனது கண்டனத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று சனிக்கிழமை 20 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெற உள்ளதாகவும் அதில் தலித் சமுதாய மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி வருகின்ற 21 ஆம் தேதி நினைவேந்தல் பேரணி ஒன்றினை நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூலை 18ஆம் தேதி வாழைப் படத்தின் முதல் பாடல் வெளியிட்ட விழாவும், பாடலாசிரியர் மற்றும் பாடகர் அறிவு உருவாக்கியுள்ள வள்ளியம்மா பேராண்டி ஆல்பம் பாடல்கள் ரிலீஸ் விழாவிலும் இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார். அதற்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பா.ரஞ்சித், "தீர்வை நோக்கி நகர்வதற்கான உந்துதலை விழிப்புணர்வை அந்த பேரணி உருவாக்கும் என்று நினைக்கிறேன்" என ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி நடக்க உள்ள பேரணி குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். 2026 ஆம் ஆண்டு உங்களின் அரசியல் நிலைப்பாடு மாறுமா என்று பத்திரிகையாளர்கள் தரப்பில் கேள்வி கேட்கப்பட்ட பொழுது, "பிரச்சனைகளின் அடிப்படையில் நாம் சில கேள்விகளை எழுப்புகிறோம். அதனை தீர்த்து வைக்க முயலாத போது நம் முடிவை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது என நான் நினைக்கிறேன். இது ஓர் எச்சரிக்கை தான், மக்கள் பிரச்சனை சரியாக வேண்டும் என்பதற்காக தான் நான் திமுகவிற்கு வாக்களித்தேன். ஆனால் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் 2026 இல் என்னுடைய முடிவை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது என்று ரஞ்சித் பேசியுள்ளது தற்போது திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ரஞ்சித்தின் இந்த அதிரடி பேச்சுகள் அரசியல் வட்டாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. 

Tags:    

Similar News