பிரதமர் மோடியின் விக்சித் பாரத் 2047:பெங்களூர் மக்களே ஏர்-டாக்ஸி'யில் பறக்க தயாராகுங்கள்!
பெங்களூருவை மையமாகக் கொண்ட ஏரோஸ்பேஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான Sarla Aviation, இந்தியாவின் மூன்று முக்கிய நகரங்களில் மின்சார Air Taxi சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த சேவைகள் முதலில் பெங்களூருவில் 2028 ஆம் ஆண்டு துவங்கி, பின்னர் மும்பை மற்றும் டெல்லிக்கு விரிவாக்கப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து Startup Mahakumbh 2025 நிகழ்வில், நிறுவனத்தின் CEO மற்றும் இணை நிறுவனர் அட்ரியன் ஷ்மிட் அறிவித்தார். இந்த முக்கிய முயற்சி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான விக்ஸித் பாரத் 2047 இன் நோக்குடன் இணைந்திருப்பதாக அவர் கூறினார்.
இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின்படி, Sarla Aviation, தனது Air Taxi சேவையை 2028-ஆம் ஆண்டுக்குள் பெங்களூருவில் துவக்கவுள்ளது. “இந்த சேவைகள் முதலில் பெங்களூருவில் துவங்கி, பிற பெருநகரங்களிலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்,” என ஷ்மிட் தெரிவித்ததாக இந்தியா டுடே கூறியுள்ளது. சேவை அறிமுகமான ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவின் ஒவ்வொரு மூலையும் இந்த சேவை சென்றடையக்கூடியதாக இருக்கும் என Sarla Aviation நிறுவனம் எதிர்பார்க்கிறது. இது, இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையில் புது வளர்ச்சியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் நோக்கத்துடன் பொருந்துகிறது.
Sarla Aviation - இன் Air Taxi க்கு ஷூன்யா என பெயரிடப்பட்டுள்ளது. இது ஆறுபேர் பயணிக்கக்கூடியதாகவும்,மொத்தம் 680 கிலோ எடையை ஏற்றக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேகம் 250 கிமீ/ வரை மணிக்கு செல்லும் திறன் உடைய இந்த மின்சார விமானம், 160 கிமீ வரையான தூரம் பறக்கக்கூடியது. ஆரம்பத்தில், 25 முதல் 30 கிமீ தூரத்துக்குள் உள்ள நகரப் பகுதிகளில் சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது போக்குவரத்து நெரிசலையும், மாசையும் குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.“ஷூன்யா என்பது வெறும் தொழில்நுட்ப சாதனை அல்ல, இது இந்தியாவின் நகரப்புற போக்குவரத்தை மாற்றும் நமது பார்வையின் வெளிப்பாடாகும்,”என The New Indian Express-இற்கு ஷ்மிட் தெரிவித்துள்ளார்.