'ஹைபர்லூப்' ரயில் திட்டம் 25 நிமிடத்தில் சென்னையிலிருந்து திருச்சி!
சென்னையிலிருந்து திருச்சிக்கு 25 நிமிடங்களில் செல்ல உதவும் ஹைபர் லூப் ரயில் திட்டத்தை வணிக ரீதியில் செயல்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகில் புல்லட் ரயில்கள் தான் தற்போது மிக அதிக வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்தியாவில் முதல் புல்லட் ரயில் மும்பை, ஆமதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஜப்பானில் புல்லட் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதாக தெரிகிறது. தற்போது இதைவிட அதிக வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில் ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இந்தியாவும் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. இந்த தொழில்நுட்பமானது சுரங்கம் போன்ற பெரிய குழாய்க்குள் ரயில்களை மின்காந்த மற்றும் காற்றின் உந்து சக்தியால் இயக்கும் ஒருவித தொழில்நுட்பமாகும்.
இதனை எலான் மாஸ்க் கடந்த 2013 ஆம் ஆண்டு முன்மொழிந்தார். அதன் அடிப்படையில் இந்தியா இது பற்றிய மாதிரி கட்டமைப்பு பணியை சென்னை ஐஐடி இடம் ஒப்படைத்துள்ளது. சென்னை ஐஐடி 422 மீட்டர் நீளத்துக்கு மாதிரி சோதனை ஓட்டத்துக்காக கட்டமைப்பை வடிவமைத்து உள்ளது. இதில் 350 கிலோமீட்டர் தூரத்தை அரை மணி நேரத்தில் கடக்கும் அளவுக்கு வேக வடிவமைப்பு உள்ளது. இது பற்றிய வீடியோவை ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் சென்னை ஐஐடிக்கு இந்த பணியை மேற்கொள்ள மூன்றாவது முறையாக மானியம் அளிக்கும் தருணம் வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு முன்பு இரண்டு முறை தலா சுமார் ₹84 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இந்த தொழில்நுட்ப அடிப்படையில் வணிக ரீதியிலான ஓட்டத்துக்கு ரயில்கள் தயாராகும்போது அதனை முதலில் எங்கு இயக்குவது என்பதை ரயில்வே முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார். இந்த வகையான ரயில்கள் இயக்கம் நடைமுறைக்கு வந்தால் சென்னையில் இருந்து திருச்சிக்கு 25 நிமிடத்தில் சென்றுவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில்களின் அதிகபட்ச வேகம் உலக அளவில் மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக 700 km வரை இருக்கலாம் எனத் தெரிகிறது.