மீன்வளத்துறைக்கு ரூ. 2584.50 கோடி ஒதுக்கீடு.. மோடி அரசினால் மீன் உற்பத்தி இரட்டிப்பு..

Update: 2024-02-02 03:52 GMT

2024-25 ஆம் நிதியாண்டில் மீன்வளத்துறைக்கு இதுவரை இல்லாத அளவாக ரூ. 2584.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டை விட இந்த ஒதுக்கீடு 15 சதவீதம் அதிகமாகும். முதல் ஐந்தாண்டுத் திட்டம் முதல் 2013-14 வரையிலான காலகட்டம் வரை மீன்வள நடவடிக்கைகளுக்கான செலவு ரூ. 3680.93 கோடி மட்டுமே. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இத்துறையில் முதலீட்டு இலக்கு ரூ.38,572 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இத்துறையின் வளர்ச்சியை எடுத்துரைத்தார். மீனவர்களுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் தனியாக மீன்வளத்துறை உருவாக்கப்பட்டது என்று அவர் கூறினார். இதன் விளைவாக மீன் உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது என்றும் கடல் உணவு ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மீன்வளர்ப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்கவும், ஏற்றுமதியை ரூ . 1 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்கவும், இத்துறையில் 55 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் முடுக்கி விடப்பட்டுள்ளது. 


பருவநிலை நடவடிக்கைகள், மறுசீரமைப்பு நடவடிக்கைகள், கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் கடல்வாழ் உயிரின வளர்ப்பு ஆகியவற்றை ஒருங்கிணைந்த மற்றும் பல்துறை அணுகுமுறையுடன் மேம்படுத்துவதில் கவனம் செலுத்த இரண்டாம் கட்ட நீலப் பொருளாதாரத் திட்டம் தொடங்கப்படும். இந்தியப் பொருளாதாரத்தில் மீன்வளத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இது தேசிய வருமானம், ஏற்றுமதி, உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு பங்களிக்கிறது. இந்தியாவில் சுமார் 30 மில்லியன் மக்களின் வாழ்வாதாரமாக இத்துறை உள்ளது.


2022-23-ம் நிதியாண்டில் 175.45 லட்சம் டன் மீன் உற்பத்தியுடன், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மீன் உற்பத்தி நாடாக திகழ்கிறது. இது உலகளாவிய உற்பத்தியில் 8 சதவீதமாகும். பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம், மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் மற்றும் மீனவர்களுக்கான கிசான் கடன் அட்டை போன்ற திட்டங்கள் அமிர்த காலத்தில் இத்துறையை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News