காசி தமிழ் சங்கம் 3.0: பிரதமருக்கு நன்றி தெரிவித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்!
இந்தியாவின் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார மற்றும் கல்வி மையங்களான வாரணாசி - தமிழ்நாடு இடையேயான பழங்கால தொடர்புகளை புதுப்பிக்கவும், மீண்டும் உறுதிப்படுத்தவும், கொண்டாடவும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மூன்றாவது ஆண்டாக நடத்தப்படும் இந்த நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் குழுவை மகா கும்பமேளா மற்றும் மாவட்ட நிர்வாகம் அன்புடன் வரவேற்றது. தென்னிந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் இன்று பிரயாக்ராஜுக்குச் சென்று திரிவேணி சங்கமத்தில் நீராடினார்கள். பின்னர் அவர்கள், அயோத்தியில் ஸ்ரீராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சங்கமத்தில் நீராடியது குறித்து தமிழக பிரதிநிதிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் மகத்தான தொலைநோக்குப் பார்வைக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்ததோடு, அதனை முன்னெடுத்துச் செல்லும் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானையும் பாராட்டினர். கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அழகிய நிகழ்ச்சிகளை கண்டுகளித்த அவர்கள், ஒரே பயணத்தில் மூன்று ஆன்மிகத் தலங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்பைப் பெறுவோம் என்று தாங்கள் கற்பனை செய்து பார்க்கவில்லை என்றனர்.
இந்திய மருத்துவத்தில் சித்தா முறையின் நிறுவனரும், தமிழ்மொழிக்கு முதலாவதாக இலக்கணம் வகுத்தவருமான அகத்திய முனிவரின் பங்களிப்பு இந்த காசி தமிழ் சங்கமத்தின் மையப்பொருளாக விளங்குகிறது. தமிழ் மன்னர்களான சோழர்களுடனும், பாண்டியர்களுடன் அகத்தியர் தமிழ் இலக்கியத்திற்கும், நாட்டின் கலாச்சார ஒருமைப்பாட்டிற்கும் சிறந்த பங்களிப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.