சென்னை- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை : பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்ட் 31-ல் கோலாகலத் தொடக்கம்!

சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை உட்பட பல்வேறு சேவைகளை ஆகஸ்ட் 31-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Update: 2024-08-29 04:45 GMT

சென்னை - நாகர்கோவில் இடையே தினசரி வந்தே பாரத்தில் ரயில் சேவை உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வரும் 31- ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தெற்கு ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு சென்னைக்கு முதல் முறையாக ஜூன் 20-ஆம் தேதி வருகை தர திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது சென்னையில் வந்தே பாரத் சேவை உட்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இதற்கு இடையில் பிரதமர் மோடியின் சென்னை பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதன் பிறகு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருகை பற்றி அவ்வப்போது தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது. இருப்பினும் மோடி வருகை தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் சென்னை நாகர்கோவில் இடையில் தினசரி வந்தே பாரத் ரயில் சேவை உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக வரும் 31ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து தெற்கு ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-

சென்னை - நாகர்கோவில் தினசரி வந்தே பாரத் ரயில் சேவை பெங்களூர்- மதுரை வந்தே பாரத் ரயில் சேவை உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வரும் 31-ம் தேதி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். சென்னைக்கு பிரதமர் மோடி வருவது தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. அதே நேரத்தில் சென்னை சென்ட்ரலில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்னென்ன திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்பது தொடர்பான விவரம் இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News