திரிபுரா மழை வெள்ள பாதிப்புக்கு 40 கோடி வழங்கிய மத்திய அரசு!

திரிபுரா மழை வெள்ள பாதிப்புகளுக்கு ரூபாய் நாற்பது கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

Update: 2024-08-25 11:39 GMT

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 22 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் தங்களது உடைமைகளை இழந்தனர். அவர்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து திரிபுரா மாநில முதல் மந்திரி மாணிக் சாஹா கூறுகையில், 'வரலாறு காணாத மழையை எதிர் கொண்டுள்ளோம். கோமதி ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அரசு நிர்வாகம் அருகில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி உள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநில அரசுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் கேட்டுள்ளோம்' என்றார்.

இந்த நிலையில் திரிபுரா மாநில வெள்ள பாதிப்புகளுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 40 கோடியை மத்திய அரசு விடுவிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது சமூக வலைதள பதிவில் திரிபுராவில் ஏற்பட்டுள்ள வெள்ளைச் சூழலை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய பங்காக ரூபாய் 40 கோடியை முன்கூட்டியே வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 11 குழுக்கள் ராணுவத்தின் மூன்று குழுக்கள் மற்றும் நான்கு விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மாநில அரசுக்கு உதவுகின்றன. திரிபுராவிலுள்ளது நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு இந்த கடினமான காலங்களில் மோடி அரசு தோளோடு தோள் நின்று போராடுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார் . வெள்ள பாதிப்புக்கு நிதி ஒதுக்குவதற்காக பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு திரிபுரா முதல் மந்திரி மாணிக் சாஹா நன்றி   தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News