உலக நாடுகளுடன் உறவை வலுப்படுத்த மோடியின் பயணம் - கடந்த 41 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரியா செல்ல இருக்கும் இந்தியப் பிரதமர்!
பிரதமர் மோடி இன்று ரஷ்யா செல்கிறார். அங்கு அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்கிறார்.
இந்தியா - ரஷ்யா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இருநாட்டு தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு பேச்சு வார்த்தைகளை நடத்தி உறவுகளை வலுப்படுத்தி வருகின்றனர். உச்சி மாநாடு மாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்ற பிரதமர் மோடி இன்று ரஷ்யா செல்கிறார். இன்றும் நாளையும் அங்கே பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் மோடி அதிபர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார் .
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாளை மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா செல்கிறார். பத்தாம் தேதி வரை அங்கு இருக்கும் பிரதமர் மோடி அந்த நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
குறிப்பாக ஆஸ்திரியா அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.பின்னர் இருநாட்டு தொழிலதிபர்கள் மாநாட்டில் இந்திய ஆஸ்திரிய பிரதமர்கள் பங்கேற்கிறார்கள். இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியா செல்வது கடந்த 41 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். எனவே பிரதமர் மோடியை வரவேற்பதில் மகிழ்வதாக ஆஸ்திரிய பிரதமர், கார்ல் நெகம்மர் குறிப்பிட்டு இருந்தார்.