தென் மாவட்டங்களை தக்கும் கனமழை! வழியில் நிறுத்தப்பட்ட ரயிலில் பரிதவிக்கும் 500 பயணிகள்! "மீட்பு பணிகளை துரிதப்படுத்திய புதுவை துணைநிலை ஆளுநர்"
தமிழகத்தில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஆறு, குளம் என் அனைத்தும் மழை நீர் நிரம்பி வருகிறது சில இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதும் செய்திகளாக வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8:25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு 800 பயணிகளுடன் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. ஆனால் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடிய காரணத்தினால் ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து முதல் கட்டமாக நேற்றைய தினம் 300 பயணிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 500 பயணிகள் ரயிலில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரயிலில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை குறித்து புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரிலிருந்து- சென்னை வந்த ரயில் கனமழை வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் ரயிலுக்குள் சிக்கித் தவிக்கும் பயணிகள் குறித்து மத்திய ரயில்வே இணை அமைச்சர் திருமதி.தர்ஷனா ஜர்தோஷ் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக அவர்களை மீட்பது மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்க கேட்டுக்கொண்டேன். விரைவில் பயணிகளை மீட்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்கள்.
இதனைத்தொடர்ந்து மத்திய ரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயணிகளை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக கூறினார்கள்.மேலும் அனைத்து பயணிகளுக்கும் தேவையான உதவிகள் வழங்கிடவும் மற்றும் அவர்கள் விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்கள்.
அவசர அழைப்புக்கு பதில் அளித்த மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும்,மத்திய இணை அமைச்சர் திருமதி.தர்ஷனா ஜர்தோஷ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.