ஆவின் கசமுசா - 515 கிராம் இருக்க வேண்டிய பால் பாக்கெட் வெறும் 430 கிராம் மட்டும், கொதிக்கும் மக்கள்
சென்னை: 'ஆவின்' பால் பாக்கெட் அளவு குறைக்கப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தி.மு.க 2021 தேர்தல் பிரச்சாரத்தில், 'பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்' என்று வாக்குறுதி அளித்ததது. பின் ஆட்சிப் பொறுப்பேற்றதும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றியது.
ஆனால் ஒரு புறம் பால் விலையை குறைத்துவிட்டு, பால் பொருட்களான நெய் மற்றும் தயிரின் விலைகளை சமீபத்தில் ஏற்றியது. இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் விற்பனைக்கு வந்த 500 மி.லி., பால் பாக்கெட்டின் அளவு குறைந்துள்ளது. 517 கிராம் இருக்கவேண்டிய 500 மி.லி., பால் பாக்கெட், வெறும் 430 கிராமாக குறைக்கப்பட்டுள்ளது.
"சென்னை மாதவரம் பால்பண்ணையில் புதிய இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் ஏற்பட்ட சிறிய குறைபாடு காரணமாக, இந்த அளவு குறைபாடு ஏற்பட்டிருக்கலாம் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மழுப்பலாக சம்பந்தப்பட்ட ஆவின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
"ஒருபுறம் பால் விலையை குறைத்து விட்டு, மற்றொருபுறம் பாலின் அளவை குறைப்பது நியாயமற்றது" என்று சமூக ஆர்வலர்கள் ஆவினின் செயலை விமர்சித்து வருகின்றனர்.