பெரம்பலூரில் 6 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு - தொல்லியல் துறையினர் ஆய்வு!

Update: 2021-06-28 05:28 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் அமைக்க குழி தோண்டியபோது சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலையை கைப்பற்றிய தொல்லியல் துறை அதிகாரிகள் சிலையை ஆய்வு செய்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியை மேற்கொண்டு வந்தார். அப்போது வீட்டு அஸ்திவாரம் அமைப்பதற்காக குழி தோண்டியபோது 6 அடி ஆழத்தில் கற்களாலான சுவாமி சிலை மண்ணுக்குள் புதைந்து இருப்பது கண்டெடுக்கப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குழி தூண்டுபவர்கள் அந்த இடத்தில் பக்கவாட்டிலும் தோண்டத் தொடங்கியுள்ளனர்.

அப்போது அங்கு மண்ணில் புதைந்து இருந்த ஓர் அடி உயரமுள்ள ஆறு சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த செய்தி காட்டுத் தீ போல் கிராமம் முழுவதும் பரவியது. சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த வருவாய்த் துறை அதிகாரிகள் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சிலையை ஆய்வு செய்த பிறகே இது எந்த காலத்தை சேர்ந்த சிலை என்றும் என்ன சுவாமி சிலைகள் என்பதும் தெரியவரும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரம்பலூரில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் போது சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : Hindu Tamil

Similar News