அதிமுகவில் இருந்து வந்த 8 பேருக்கு பதவி - திமுகவில் திறமையானவர்கள் இல்லையா என்று உபிக்கள் ஆதங்கம்!
கட்சியில் பல ஆண்டுகளாக இருந்து கட்சிக்கு விசுவாசமாக பிரதிபலன் எதிர்பாராமல் பணியாற்றிய உடன் பிறப்புகளுக்கு வாய்ப்பு வழங்காமல் அதிமுகவில் இருந்து வந்து திமுகவில் இணைந்த பலருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அமைச்சரவையில் பதவி வழங்கியுள்ளது திமுக தொண்டர்களகடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் நாளை முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதையடுத்து அவரது அமைச்சரவையில் யாருக்கு எல்லாம் வாய்ப்பு வழங்கப்படும் என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் நாளை பதவியேற்கும் அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அந்தப் பட்டியலில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த 8 பேருக்கு, அதாவது அமைச்சராக பதவி ஏற்கும் 34 பேரில் வேறு கட்சியில் இருந்து வந்த 24% பேருக்கு ஸ்டாலின் வாய்ப்பளித்து உள்ளது உடன் பிறப்புகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எ.வ.வேலு, ராஜ் கண்ணப்பன், "திருநீறு பூசி இந்துக்களை ஏமாற்றி விடுவோம்" என்று பேசிய கேகேஎஸ்எஸ்.ராமச்சந்திரன், அறநிலையத் துறை பதவி வழங்கப்பட்டுள்ள சேகர் பாபு, முத்துசாமி, ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் 5 கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி ஆகியோர் தான் அந்த 8 பேர்.
திமுகவில் போஸ்டர் ஒட்டி கட்சிப் பணியாற்றும் தொண்டர் கடைசி வரை தொண்டராகத் தான் இருக்க வேண்டும் என்ற விஷயத்தை திமுக தலைமை மீண்டும் நிரூபித்திருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் திமுகவில் திறமையானவர்களே இல்லையா என்ற ஆதங்கமும் எழுந்துள்ளது.