ராமேஸ்வரத்தில் ₹8,300 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்: நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி!

தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் ₹ 8,300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். முன்னதாக, இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்த அவர், சாலை பாலத்திலிருந்து ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து பாலத்தின் செயல்பாட்டைப் பார்வையிட்டார்.

முன்னதாக, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் சுவாமி தரிசனம் செய்து பூஜை வழிபாட்டை மேற்கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இன்று, ஸ்ரீ ராம நவமியின் புனித தருணமாக அமைந்துள்ளது என்று கூறினார். அயோத்தியில் உள்ள அற்புதமான ராமர் கோவிலில், இன்று, சூரியனின் தெய்வீக கதிர்கள் குழந்தை ராமரை ஒரு பெரிய திலகத்துடன் அலங்கரித்தன என்று அவர் கூறினார்.
"பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கையும், அவரது ஆட்சியிலிருந்து நல்லாட்சியின் உத்வேகமும் தேசத்தைக் கட்டமைப்பதற்கான குறிப்பிடத்தக்க அடித்தளமாக செயல்படுகின்றன" என்று அவர் கூறினார். தமிழ்நாட்டின் சங்க கால இலக்கியங்களிலும் பகவான் ஸ்ரீ ராமர் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், புனித பூமியான ராமேஸ்வரத்திலிருந்து ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்த பிரதமர், ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) இடையே புதிய ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பாலம் ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ராமாயணத்தின் படி, ராமர் சேது கட்டுமானம், ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் இருந்து தொடங்கப்பட்டது.