ஜாதி மறுப்பு திருமணமா? வாக்கு கிடையாது - CSI திருச்சபையில் கேள்விக்குறியாகும் சமூகநீதி?

Update: 2021-07-02 07:07 GMT

சிஎஸ்ஐ திருச்சபையில் லே செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து அங்கு வாக்காளராக இருக்கும் திருச்சபையை சேர்ந்த சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள், 120 நாட்களுக்கு மேல் சொந்த ஊரில் இல்லாத கிறிஸ்தவர்களுக்கு வாக்கு கிடையாது என்று வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி-நாசரேத் லே செயலாளர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அங்கு பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்த திருச்சபையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள் மற்றும் பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு பொறுப்பாளராக இருக்கும் இந்த பதவிக்கு கடுமையான போட்டி நிகழும். தற்போது இந்த பதவியில் இருந்து வரும் தொழில் அதிபர் எஸ்.டி.கே ராஜன் என்பவர் தனக்கு ஆதரவாக வாக்களிக்காதவர்களுக்கு வாக்குரிமை கிடையாது என்று கூறி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள், சொந்த ஊரில் 120 நாட்களுக்கு மேல் இல்லாதவர்கள் என்ற காரணங்களைக் காட்டி அவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் இடம் இல்லை என்று கூறியுள்ளார். அதேபோல் கடந்த முறை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கு இந்த முறை பெயர் சேர்க்கப்படும் என்று தெரிவித்ததையும் அவர் பின்பற்றவில்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் திருச்சபையில் போராட்டம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து சமாதானப்படுத்த வந்த காவல் துறையினரிடம் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்த அவர்களை சமாதானம் செய்ய முடியாமல் காவல்துறையினர் சிரமப்பட்டனர். இதுகுறித்து ராஜனிடம் கேட்டபோது திருச்சபையில் பல்வேறு விதிகள் இருப்பதாகவும் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தவர்கள் தங்கள் மதத்திற்கு மாறும் வரை அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது என்றும் அதே போல் 120 நாட்கள் ஊரில் இல்லாதவர்களுக்கும் வாக்கு கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜாதி கிடையாது என்று கூறி மதம் மாற்றும் இதுபோன்ற கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் மாறிய பிறகு தங்கள் மதத்திற்குள் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை கடைபிடித்து வருவது தொடர்கதையாகி வரும் நிலையில் தங்களுக்கு தகுந்தாற்போல் விதிகளை மாற்றி கொள்ளும் இதுபோன்ற திருச்சபைகளில் சமூகநீதி என்பது எப்போதுமே கிடையாது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Source : Polimer news

Similar News