காஞ்சிபுரம்: இந்திய கல்விக் கழகத்தின் IITTM 11-வது பட்டமளிப்பு விழா.. இது மாணவர்களின் பொறுப்பு தான்..
தேசிய முக்கியத்துவம் பெற்ற மத்திய அரசு நிறுவனமான காஞ்சிபுரத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான இந்திய கல்விக்கழகத்தின் IITTM 11-வது பட்டமளிப்பு விழாவில் 411 மாணவர்கள் பட்டம் பெற்றனர். 30 டாக்டர் பட்டங்கள், பி-டெக் மற்றும் எம்-டெக் படிப்புகளில் 149 இரட்டைப் பட்டங்கள், 33 எம்-டெக் பட்டங்கள், 187 பி-டெக் பட்டங்கள், 12 முதுநிலை வடிவமைப்பு பட்டங்கள் இவற்றில் அடங்கும். இந்த ஆண்டு பிஎச்.டி பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து மிக அதிக அளவானதாகும்.
இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித்துறையின் செயலாளர் டாக்டர் கலைச்செல்வி தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். கல்வி, தொழில் துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் என்ற மூன்று அமைப்புகளும் மாறுபட்ட வகையில் எவ்வாறு சிறப்பாக இணைந்து பணியாற்ற முடியும் என்பது பற்றி சிந்திப்பதற்கான காலம் இதுவாகும் என்றும் இது காலத்தின் தேவை என்றும் அவர் கூறினார். 2047 வரை நாம் கொண்டாடவிருக்கும் அமிர்தகாலத்தின் முதல் ஆண்டில் இருக்கும் நிலையில் 2030-ம் ஆண்டு நாட்டிற்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த ஆண்டில் 5 ட்ரில்லியன் பொருளாதாரமாக மாறுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். இந்த இலக்கை எட்டுவது நமது பொறுப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது டேட்டா என்பது பணமாகவும், வணிகமாகவும், அறிவியலாகவும், தொழில் நுட்பமாகவும், எதிர்காலமாகவும் இருக்கிறது. இந்தக் கல்வி நிறுவனத்தில் இருந்து நீங்கள் நிபுணத்துவம் பெற்றுள்ள தகவல் தொழில்நுட்பத்தை முற்றிலும் வித்தியாசமான வகையில் பயன்படுத்தி நாட்டில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் என் கலைச்செல்வி கூறினார். இந்த பூமியை பாதுகாப்பானதாக நீடிக்கவல்லதாக மாற்றுவதை உறுதிசெய்வதில் பருவநிலை மாற்றம் என்பது ஒரு சவாலாக உள்ளது. இதனை எதிர்கொள்ள பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் பயிர்வகைகள் மற்றும் கட்டுமானங்கள் தேவைப்படுகின்றன. இதற்கு தேவையான வடிவமைப்புகளை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Input & Image courtesy:News